ஜி.டி.பி மேலும் சரிவடையும் – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி மைனஸ் 23. 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதில் அதிகபட்சமாக உற்பத்தி துறை மைனஸ் 39.3 விழுக்காடும், சுரங்கத்துறை மைனஸ் 23.3 விழுக்காடும் வீழ்ச்சியை கண்டுள்ளன.
கடந்த காலாண்டில் வேளாண்துறையை தவிர அனைத்து துறைகளும் சரிவை சந்தித்திருப்பதாகவும், இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் ஒரு சில மாதங்களில் மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சுதந்திர இந்தியாவின் மிக மோசமான சரிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், ஜிடிபி சரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், உலகின் மிக வலிமையான இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பொருளாதார கொள்கையை தவறாக கையாள்வதில் பிரதமர் மோடி டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.