ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 576 ரூபாய் குறைந்து 39,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,921 ரூபாயாக உள்ளது. இந்த விலை திங்கட்கிழமை விலையை விட கிராமுக்கு 72 ரூபாய் குறைவாகும். வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் சரிந்து 71 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 800 ரூபாய் குறைந்து 71,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,622 ரூபாய்க்கும், சவரன் 36,976 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரே மாதத்தில் கிராம் 528 ரூபாய் விலை ஏறி கிராம் 5,150 ரூபாய்க்கும், சவரன் 41,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் கிராம் 5,196 ரூபாய்க்கும், சவரன் 41,568 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வராலாற்றில் இல்லாத உச்சமாக கடந்த 7-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 5,416 ரூபாய்க்கும், சவரனுக்கு 43,328 ரூபாய்க்கும் விற்பனையானது. ஜூலை 7-ல் இருந்து, ஆகஸ்ட் 7 வரை ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் ஒரு கிராம் 790 ரூபாயும், சவரன் 6,320 ரூபாயும் விலை உயர்ந்தது.
தங்கம் விலை உச்சம் தொட்ட ஆகஸ்ட் 7-ல் இருந்து ஏறிய வேகத்தில் மீண்டும் விலை இறங்கத் தொடங்கியுள்ள்து. இந்த 2 வாரத்தில் மட்டும் ஒரு கிராம் தங்கம் 495 ரூபாயும், சவரன் 3960 ரூபாயும் குறைந்துள்ளது. விலை ஏற்ற, இறக்கங்கள் தற்காலிகமானதே எனக் கூறும் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், 2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை சமாளிக்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை குவித்தனர். தற்போது பொருளாதாரம் மீண்டுவருவதால் தங்கத்தின் மீதிருந்த முதலீடுகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.