கொரோனா நோய்க்கு புதிதாக மூன்று அறிகுறிகளை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இணைத்துள்ளது.
கொரோனா அறிகுறிகளாக முதலில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றை நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்தன. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா அறிகுறிகளாக குளிர், தசை வலி, தலைவலி, தொண்டைபுண், வாசனை நுகர்வு தன்மையில்லாமை உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில் புதிதாக மூன்று அறிகுறிகளை அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இணைத்துள்ளது. அதில், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிய மூன்று அறிகுறிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறி தெரிகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி பழனி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சுகாதாரத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. பலருக்கு அறிகுறி தெரியாததால் மேலும் பலருக்கு தொற்று பரவ காரணமானது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வி.கே பழனி கூறியதாவது:- கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல், சுவையின்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இவற்றில் ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலேயே அவர்களை தனிமைப்படுத்தி சொதனை செய்யப்படுகிறது. அறிகுறி தெரிவதால் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது எளிதாக உள்ளது.