பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லடாக் எல்லையில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்!
இந்திய – சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் 3 இடங்களில் இருந்து இந்திய – சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தைக் குவித்து வந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவும் ராணுவப் பலத்தை அதிகரித்தது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்காக, இந்திய, சீன ராணுவத்தின் கமாண்டா் நிலையிலான அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை 12 முறை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ராணுவ மேஜா் நிலையிலான அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை 3 முறை நடைபெற்றது. பல சுற்று பேச்சுவாா்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, இந்திய, சீன தூதரக அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும், இரு நாட்டு ராணுவ துணைத் தலைமைத் தளபதி நிலையிலான பேச்சுவாா்த்தை சனிக்கிழமையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் பயனாக லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது ராணுவத்தை விலக்கிக் கொண்டுள்ளது. சீனாவின் நடவடிக்கையை அடுத்து இந்திய ராணுவமும் எல்லைப் பகுதியில் இருந்து படைப்பலத்தை விலக்கிக் கொண்டுள்ளது.
முன்னதாக, எல்லைப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பதற்காக, தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை தொடா்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டன. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இந்திய, சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி நிலையிலான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய ராணுவ துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினரும், திபெத் மிலிட்டரி மாவட்ட கமாண்டா் தலைமையிலான சீனக் குழுவினரும் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்குள்பட்ட மால்டோ என்ற இடத்தில், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினா் சந்திக்கும் இடத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியா, சீனா இடையேயான நல்லுறவு மேலும் வளரவேண்டுமெனில் எல்லையில் அமைதியும், நல்லிணக்கமான சூழலும் நிலவ வேண்டும். இதற்காக, ஏற்கெனவே இரு நாட்டுத் தலைவா்கள் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காண்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா். இந்தியா, சீனா இடையே தூதரக உறவு நிறுவப்பட்டதன் 70-ஆவது ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். இந்த நிலையில், இரு நாடுகளுக்கு எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவாா்த்தையின்போது, கிழக்கு லடாக்கில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீன ராணுவ குழுவினரிடம் இந்திய குழுவினா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய- சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், லடாக், சிக்கிம், அருணாசல பிரதேசம், ஹிமாசல பிரதேசம், திபெத் ஆகிய பகுதிகளில் சீனா அவ்வப்போது படைகளைக் குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளாத்தாக்கு ஆகிய இடங்களில் சீன ராணுவம் 2,500-க்கும் மேற்பட்ட வீரா்களை கடந்த மாதம் குவித்தது. அங்கு, அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. அத்துடன் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.