கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் இந்தியா உட்பட மொத்த உலகத்தையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில், இந்த பாதிப்பே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ‘ஆம்பன்’ புயல் தாக்கியது. அந்த பாதிப்பு ஓய்வதற்கு முன்னரே ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரித்தது. தொடர்ச்சியான இயற்கை பாதிப்புகளால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சோகத்தில் உள்ளனர்.
இவை அனைத்துக்கும் மத்தியில், இந்தியாவில் கொரோனாவுக்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த 4 கட்ட ஊரடங்கு முடிவடைந்து, முதல்முறையாக Unlock 1 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் வேலைக்குச் செல்லலாம், ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தைச் சரிசெய்யலாம் என சற்றே உற்சாகத்தில் இன்றைய நாளைத் தொடங்கிய மக்களுக்கு, வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மக்களுக்குத்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளியாகத் தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் ஜூன் 3-ம் தேதி பிற்பகல், மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு, நிசார்கா (Nisarga) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூறாவளி மகாராஷ்டிராவைக் கடக்கும்போது, அம்மாநில தலைநகர் மும்பையில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையைத் தவிர தானே, நவி மும்பை, பன்வெல், கல்யாண் டோம்பிவ்லி, மீரா பயந்தர், வசாய் விரார், பத்லாப்பூர், அம்பர்நாத் ஆகிய நகரங்களிலும் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.