ரகசிய குறியீட்டுடன் இந்திய எல்லைக்குள் பிடிபட்ட புறா… உளவு பார்க்க அனுப்பப்பட்டதா…!
உளவு பார்க்க அனுப்பப்பட்டதாக இந்திய எல்லைக்குள் பிடிபட்ட புறா, தனக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் கிராம விவசாயி தெரிவித்துள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ளது காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த மன்யாரி கிராமம். இங்கு கடந்த திங்கள்கிழமை அன்று புறா ஒன்று கிராம மக்களிடம் பிடிபட்டது. அதன் காலில் சில எண்கள் எழுதப்பட்ட மோதிரம் ஒன்று இருந்ததால், சந்தேகம் அடைந்த மக்கள், புறாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்தப் புறா பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்கனவே பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி வரும் நிலையில், இந்த புறாவும், உளவு பார்க்க அவர்களால் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது.
இது குறித்து விளக்கமளித்த கதுவா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர மிஸ்ரா,குறிப்பிட்ட அந்த புறா எங்கிருந்து பறந்த வந்தது என்பது தெரியாது’ என்று குறிப்பிட்டார். எல்லையோரத்தில் பிடிபட்ட அந்த புறாவின் காலில் மோதிரம் இருந்ததாகவும், அதில் சில நம்பர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ரகசிய குறியீட்டுடன் பிடிபட்ட புறா, தனக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் விவசாயி ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்திய எல்லையில் இருந்து 4 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள பக்கா ஷகர்கார் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹபிபுல்லா என்ற விவசாயி, தான் வளர்த்து வரும் ஜோடிப் புறாவில் அது ஒன்று என்று கூறியுள்ளார். அதன் காலில் மாட்டப்பட்டுள்ள மோதிரத்தில், தனது செல்போன் நம்பர் எழுதப்பட்டுள்ளதாகவும், உளவு பார்க்க புறாவை அனுப்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய விதிமுறைப்படி புறாவை திரும்ப பெற உதவ வேண்டும் என்றும் ஹபிபுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.