கரோனா பரவலைத் தடுக்க “சென்னையில்“ அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த திட்டம்.!!
சென்னை: கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் வகையில் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தை தமிழக அரசு தொடக்கியுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கரோனா தொற்று அதிகம் பரவி வரும் ராயபுரம் மண்டலத்தில் பொதுமக்களுக்கு கரோனா சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த திட்டத்தின்படி, சென்னையில் கரோனா தொற்று அதிகமுள்ள 33 வார்டுகளில் காய்ச்சல், சளி உள்ளோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 33 வார்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் எக்ஸ்ரே எடுப்பது, கரோனா பரிசோதனை மேற்கொள்வது போன்றவை நடத்தப்படும். இதற்காக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் அறிகுறி இல்லாதவர்களுக்கும் எக்ஸ்ரே எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.