திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஊரடங்கு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்த போலீஸார் நூதன வகையில் இளைஞருக்கு விழிப்புண்ர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் சாலையில் தேவையின்றி வலம் வந்த இளைஞர்களை ஓரங்கட்டியதோடு அவர்களை கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் இருந்த ஆம்புலன்ஸில் பயணம் செய்யுமாறு கூறி போலீஸார் ஏற்றிவிட்டனர். அவ்வளவுதான் சற்று நேரத்தில், போலீஸார் நடத்திய இந்த நாடகத்தின் ஜன்னல் கதவு வழியே ஒரு இளைஞர் எகிறி குதித்து தப்பி ஓட முயன்ற சம்பவம் அரங்கேறியது.
திருப்பூர், பல்லடம் நான்குவழி சாலைகளில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இந்த இளைஞர்களை பிடித்த போலீஸார் ஏற்கனவே தயார் நிலையில் நின்ற ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று பரிசோதனை செய்து வருமாறு கூறினர். உள்ளே அமர்ந்திருந்த நபர், புதிதாக ஏறிய இளைஞர்களிடம், “தனக்கு கொரோனா இருப்பதாகவும், உங்களுக்கும் வரணுமா? என்றும் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர் சற்றும் தாமதிக்காமல், அந்த ஆம்புலன்ஸின் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அவரை உள்ளேயே இருக்கும்படி போலீஸார் வற்புறுத்துகின்றார். பின்னர் இது எல்லாம் நாடகம் என்று விளக்கிய போலீஸார், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். இளைஞர்களும் தேவையின்றி வெளியே வரமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.