கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக பல கோடிகள் செலவில் கங்கை நதியை சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. ஆனாலும் பலன் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், ஊரடங்கு அறிவித்த 10 நாட்களில் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கங்கை நதி தூய்மை திட்டங்கள்
கங்கை நதி குளிப்பதற்கு கூட தகுதியற்றது என கடந்த வருடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது. உத்தரபிரதேச மக்கள் பண்டிகை காலங்களில் கங்கை நதிகளில் புனித நீராடும் நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளித்தது. அதோடு சில மாதங்களுக்கு முன்பு அதிக மாசு காரணமாக நதி முழுவதும் நச்சு நுரை பொங்கியது. கங்கை நதியை சுத்தப்படுத்த 2019-ம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாயை நமாமி கங்கை திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியது. இது தவிர 2016-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. ஆனாலும் கங்கையை பல கோடிகள் செலவு செய்தும் தூய்மை படுத்த முடியாமல் இருந்தது.
ஊடரங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால் உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக தொழிற்சாலை கழிவுகள் எதுவும் 10 நாட்களாக கங்கையில் கொட்டப்படாமல் இருந்தன. தற்போது கங்கை நதி ஓடும் பகுதிகளில் முக்கியமான 36 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் முடிவில் 27 இடங்களில் குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக கங்கை நீர் மாறியுள்ளதாகவும், மாசின் அளவு குறைந்துள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கங்கை நதியை சுத்தம் செய்ய பல கோடி அளவில் பணம் செலவு செய்தும் பண்ணமுடியாததை இந்த 10 நாட்கள் செய்துவிட்டது.தொழிற்சாலை வளர்ச்சி இயற்கையை அழிப்பதற்கு அல்ல.நாம் இயற்கையோடு ஒட்டி வாழவும் வழிவகுக்க வேண்டும்.இன்னும் சில தினங்களில் மீண்டும் தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்க ஆரம்பித்தால் கங்கை நதி மீண்டும் அசுத்தம் அடையலாம். கரோனா வைரஸ் மனிதர்களை மிரட்டினாலும், இயற்கையையும், வன விலங்குகளையும் மகிழ்வித்து வருகின்றது. பூமி மனிதனுக்கு மட்டும் அல்ல என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.இதனை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் இதுபோன்ற பேரிடர்களையும் புது நோய்களையும் தடுக்க முடியும்.