பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தற்போது நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
“கான்ச்லி லைஃப் இன் எ ஸ்லோ” படத்தில் நடித்தவர் ஷிகா மல்ஹோத்ரா. கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
நடிகை எப்படி நர்ஸாக முடியும் என்று நினைக்கலாம். அவர் டெல்லியில் உள்ள வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் படித்து பட்டம் பெற்றுள்ளார். ஷிகா நர்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இது குறித்து ஷிகா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் படித்து நர்ஸ் பட்டம் பெற்றேன். எப்பொழுதும் என்னை பாராட்டுவதை போன்று இம்முறையும் நாட்டுக்காக சேவை செய்யும் என் முயற்சிக்கும் உங்களின் ஆதரவு தேவை.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் நான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர முடிவு செய்தேன். நர்ஸாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளேன். தயவு செய்து வீட்டில் இருங்கள். அரசுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நர்ஸிங் படித்திருந்தாலும் எனக்கென்னவென்று வேறு தொழிலுக்கு சென்றவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் ஷிகாவின் முயற்சியை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.