90 விழுக்காட்டை கடந்த முதல் மாநிலமானது டெல்லி..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதன்படி தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 76.2 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் குணமடைவோர் விகிதம் 90 விழுக்காட்டை தாண்டியுள்ளது. அதாவது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களின் குணமடைவோரின் சராசரி 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் 70 விழுக்காட்டை கடந்துள்ளது.
தொற்று பரவத்தொடங்கிய காலகட்டத்தில் குறைவாகவே இருந்த குணமடைவோர் விகிதம், பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ள போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகும் போது, குணமடைவோர் விகிதம் 99 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
டெல்லியில் குணமடைவோர் விகிதம் அதிகரித்திருந்தாலும், 40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாள்தோறும் 40 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தற்போது சராசரியாக டெல்லியில் தினமும் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்து வரும் நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கையை பூஜ்யமாக மாற்றுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் மக்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர் பரிசோதனைகள், கண்காணிப்பு, கடுமையான கட்டுப்பாடுகளே டெல்லியில் தொற்று பரவல் குறைவதற்கும், பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் அதிகரிப்பதற்கும் காரணமாக கருதப்படுகிறது.