மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி, பறவைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
புனேவின் புத்வர் பெத் பகுதியில் சிறு வீட்டில் வசித்து வருபவர் 79 வயதாகும் ஹேமா ஷனே. இவர் சாவித்ரிபாய் முலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் புனேவில் உள்ள கர்பானே கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர் ஆவார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயது முதலே மின்சார இணைப்பு இன்றி வளர்ந்துள்ளார். அதன் பின்னரே அப்பகுதிக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மின்சார பயன்பாட்டை விரும்பியதும் இல்லை. இதுவரை தனது வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தியதும் இல்லை.
இதுகுறித்து அவர் பேசும் போது, உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே அத்தியாவசிய தேவை என்றும் தன்னால் மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ முடியும் என்றும் கூறினார். இயற்கை சூழலான வாழ்வே போதும் என்கிறார்.
இயற்கையின் மீது பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ள ஹேமா, தான் வசித்து வரும் வீடு தனது செல்லப்பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் தான் சொந்தம் என்று தெரிவித்துள்ளார். இவரை பலர் வித்தியாசமாக பார்ப்பதாகவும், அதை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் ஓய்வுப்பெற்ற பேராசிரியை ஹேமா கூறி உள்ளார்.
நான் புத்தரின் பொன்மொழியான ‘உங்கள் பாதையை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்பதை பின்பற்றி வாழ்கிறேன். எனக்கு பிறகு நான் வசித்த இடம் பறவைகளுக்கே சொந்தமாகும்’ நான் யாருக்கும் பாடம் புகட்ட எண்ணியதும் இல்லை என்கிறார். சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் வரும் பக்சிராஜன் கதாபாத்திரம் போல் நிஜ வாழ்விலும் டாக்டர் பட்டம் பெற்ற ஹேமா வாழ்ந்து வருகிறார்.