75 நாட்களுக்குப் பின் சென்னை திரும்பிய காசிமேடு மீனவர்கள்…
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 23ஆம் தேதி, பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 30ஆம் தேதியே கரைக்கு திரும்ப வேண்டியவர்கள், திரும்பி வராததால் உறவினர்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் சென்ற படகில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் மியான்மர் கடற்படையினர் மீனவர்கள் 9 பேரையும் மீட்டனர். கொரோனா ஊடரங்கால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.
கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகில் பழுது நீக்கச் சென்ற மீனவர் ஒருவர் தண்ணீரில் விழுந்து மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 8 மீனவர்களும் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார். இந்நிலையில், கடலுக்குச் சென்ற 5வது நாளே படகில் பழுது ஏற்பட்டதாகவும், அதை சரி செய்ய முடியாததால், காற்றின் திசையில் படகு சென்றதாகவும் மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான முருகன் தெரிவித்துள்ளார். 15 நாட்களுக்குப் பிறகு உணவு, தண்ணீர் ஆகியவை தீர்ந்து விட்டதால், சிறிய வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களையே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.
அந்த படகில் வந்தவர்கள் இலங்கை மீனவர்கள் என்றும், அவர்களது படகு சிறியதாக இருந்ததால், தங்களது மிகப்பெரிய விசைப்படகை இழுத்துச் செல்ல முடியவில்லை என்றும் முருகன் தெரிவித்துள்ளார். மறுநாள் பெரிய படகுடன் வருவதாக கூறிச் சென்ற நிலையில், தங்களது படகு மிதந்தே வேறு பகுதிக்குச் சென்று விட்டதாகவும் முருகன் கூறினார். நடுக்கடலிலேயே 55 நாட்கள் வாழ்ந்த நிலையில், மியான்மர் கடற்படையினர் தங்களை மீட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
75 நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும், நடுக்கடலில் தத்தளித்த மனநிலையில் இருந்து மீண்டு வர குறைந்தபட்சம் 6 மாதமாகும் எனக் கூறும் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.