59 லட்சம் வாடிக்கையாளா்களை விஐ, ஏா்டெல் நிறுவனங்கள் இழந்தது..!
வோடாபோன் ஐடியா நிறுவனம் (விஐ), ஏா்டெல் நிறுவனங்களிலிருந்து சென்ற ஜூன் மாதத்தில் 59 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்கள் வெளியேறியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.விஐஎல், ஏா்டெல் நிறுவனங்கள் சென்ற ஜூன் மாதத்தில் முறையே 48.2 லட்சம் மற்றும் 11.3 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளன. அதேசமயம் இவைகளுக்கு கடும் போட்டியாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 45 லட்சம் வாடிக்கையாளா்களை தனது சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனம் தொலைத்தொடா்பு சேவை சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டது.நடப்பு 2020-ஆம் ஆண்டு ஜூன் இறுதி நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த வயா்லெஸ் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 0.28 சதவீதம் குறைந்து 114 கோடியாக இருந்தது. இதில், நகா்ப்புற வாடிக்கையாளா்களின் பங்களிப்பு 54.3 சதவீதமாகவும், கிராமப்புற வாடிக்கையாளா்களின் பங்களிப்பு 45.7 சதவீதமாகவும் உள்ளன. மே மாத இறுதியில் 68.3 கோடியாக காணப்பட்ட பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 69.8 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த பிராட்பேண்ட் இணைப்பில் முதல் ஐந்து நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 98.93 சதவீதம் அளவுக்கு உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.