அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார்.
கொரோனா பரவல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவானதால் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நீடித்தது.
இதில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே இழுபறி நீடித்தது. எனினும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த ஜோ பைடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அவர் அமெரிக்காவின் 46-வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அது மட்டுமின்றி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த சட்ட போராட்டத்தில் அவர் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். எனவே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டிரம்ப், 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதை சூசகமாக தெரிவித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில், இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன், எனக் கூறினார்.
டிரம்பின் இந்த பேச்சு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரின் விருப்பத்தை காட்டுவதோடு, தற்போதைய தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் தயாராகி விட்டார் என்பதையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.