கொரோன சோகங்கள் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சிலர் காமெடி அவதாரம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், கொத்துக் கொத்தாக உயிர்ப் பலியைத் தடுக்க கரோனா வைரஸின் பெயரை மாற்றுவதுதான் ஒரே வழி என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீ.
“யார் அந்த ஸ்ரீ?” என்று கேட்பவர்களுக்காக ஒரு சின்ன ஃபிளாஷ்பேக். 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம். “சிவகாசியோட நியூமராலஜி கூட்டுத்தொகை 18 ஆக இருக்குது. ஸ்ரீலங்கா, காஷ்மீர், மும்பை மாதிரியே சிவகாசிக்கும் 18 வருவதால் தான், அந்த ஊர்களில் குண்டுவெடிப்பதைப் போலவே, சிவகாசியும் அடிக்கடி பட்டாசு விபத்து ஏற்பட்டு பல பேரைக் கொள்கிறது. இதுக்கு ஒரே தீர்வு “SIVAKASI”என்கிற பேரை SIVAKAASI” என்று மாற்ற சிபாரிசு செய்தவர். இவரது பரிந்துரையை அப்படியே சிவகாசி நகராட்சி தீர்மானமாக நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்த வரலாற்று(!) நிகழ்வும் நடந்து இருக்கிறது.
காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்றால், தமிழ்நாட்டை ‘தமிழ் ஸ்டேட்’ என்று பெயர் மாற்றச்சொல்லி அன்றைய முதல்வர் கருணாநிதிக்கே கடிதம் போட்டவர். இவ்வளவும் செய்தவர் இப்போது மட்டும் சும்மா இருப்பாரா? பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஜோதிடர் ஸ்ரீ என்ன எழுதியிருக்கிறார் என்று சொன்னால் சிரியாய்ச் சிரிப்பீர்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லவும், தீர்வு செய்யவும் தயாராக இருக்கிராறாம் ஸ்ரீ . மோடிஜி இந்த தெய்வீக மகா குருவை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கும்படி உலக மக்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு, ஏ.எஸ்.எஸ்.ஸ்ரீராஜராஜேஸ்வரி (ஜோதிடரின் மனைவி), சிவகாசி”.
இப்படிப் போகிறது கடிதம். இதன் நகலை தமிழக முதல்வருக்கும், விருதுநகர் கலெக்டருக்கும் கூட அனுப்பியிருக்கிறார்கள்.
“தீர்வை பிரதமரிடம்தான் சொல்ல வேண்டுமா? பத்திரிகையாளர்களான எங்களிடம் சொன்னால் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் நாங்கள் வெளியிடுவோம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன்பின் , அந்த சூட்சுமத்தைப் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீ.
“அதாவது ஆங்கில உச்சரிப்புப்படி இப்ப இந்த வைரஸ்ஸை எல்லாருமே ‘கொரானா’ என்று தான் எழுதவும் சொல்லவும் படுகிறது. எண்கணிதப்படி இதனுடைய (CORONA) கூட்டு எண் 7. உயிர் பலியும், கட்டுக்கு அடங்காத நிலையையும் கொடுக்கும் என்பதே அதன் பலனாகும்.
அதுவே, கரோனா ( KOROONAA) என்று எழுதினால் கூட்டு எண் 5 வரும். சாந்த நிலையை, உயிர் பலி இல்லாத நிலையை உருவாக்கும் என்பதே இதன் பலன். எனவே, இந்தியாவில் அதன் பெயரை கரோனா என்று மாற்றி, அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வேண்டும். 130 கோடி மக்களும் புதிய பெயரை உச்சரித்து, கோடிக்கணக்கான பத்திரிகை பிரதிகளிலும் அந்தப் பெயர் அச்சிடப்படும்போது அதன் பலனை நாம் கண்கூடாகப் பார்ப்போம். கரோனாவின் ரத்த வெறியும் அடங்கி, பரமசாதுவாகிவிடும்.
கூடவே, நாட்டு மக்களை எல்லாம் பொது இடங்களில் திரண்டு ஒரு கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். அப்படிச் செய்தால், இந்தியாவில் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் இருந்தே கரோனாவை ஒழித்துவிடலாம். இதைத்தான் பிரதமரிடம் சொல்லப் போகிறேன்” என்றார் ஸ்ரீ.மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் எப்படி சிலர் செய்யும் காமெடி , மக்களிடம் வெறுப்பை கிளப்புகிறது.