இந்தியாவில் மொபைல் பயன்பாடு என்பது மக்கள் தொகைக்கு இணையாக உயர்ந்துகொண்டே செல்கிறது. மொபைல் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், இணையதள பயன்பாடும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில், இணைய பயன்பாடு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜியோ வருகைக்கு முன்னதாக ஒரு ஜி.பி டேட்டா 200 ரூபாய்க்கு மேல் இருந்த நிலையில், ஜியோ இலவச டேட்டா உடன் களமிறங்கியதால் பல நிறுவனங்கள் சந்தையில் தடுமாற்றத்தை சந்தித்தன. ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் பெருமளவில் வருவாய் இழப்பை எதிர்கொண்டன.
ஏர்செல் நிறுவனம் மூடப்படவே, ஐடியா நிறுவனம் வோடாபோன் உடன் ஐக்கியமானது. எனினும், ஜியோ ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து அந்நிறுவனங்கள் மீள முடியவில்லை. இந்த நிலையில், தற்போது, குறைந்தவிலையில் டேட்டா கிடைக்கும் நாடாக இந்தியா அறியப்படும் நிலையில், விரைவில் ஏர்டெல் சேவைக்கட்டணம் உயரலாம் என பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக இணைய சேவை வழங்குவது தொலைத் தொடர்பு துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 160 ரூபாய்க்கு மாதத்திற்கு 16 ஜி.பி டேட்டா வழங்குவது வருந்தக்கூடிய ஒன்று என குறிப்பிட்டுள்ளார். அந்த விலைக்கு மாதத்திற்கு 1.6 ஜி.பி மட்டும் உபயோகிப்பதே சரி என்றும், அதிக இணைய சேவை வேண்டுமென்றால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அளவுகோளின்படி பார்த்தால், ஒரு ஜி.பி டேட்டா 100 ரூபாய்க்கு வருகிறது.
அவர் மேலும் கூறுகையில், ‘பயனரின் சராசரி வருவாய் எனப்படும் ARPU ரூ.200 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் பார்க்க விரும்பினால் அதற்கேற்ற இணைய சேவையை பெற வேண்டும். 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ARPU ரூ.157 வரை உயர்த்தப்பட்டது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கடினமான சூழலில் நாட்டிற்கு சேவை வழங்கி வருகின்றனர். 5ஜி சேவை, ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உள்ளிட்டவைகளில் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஏர்டெல் கட்டணத்தை உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களின் பக்கம் நகரவும் அதிக வாய்ப்பு உள்ளது.