வேளாண் சட்டங்கள்: திமுக நீதிமன்றம் செல்லும் – மு.க.ஸ்டாலின்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் செல்லவில்லை என்றால் தி.மு.க. நீதிமன்றம் செல்லும் என்று காஞ்சீபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால், மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.
மாநிலத்தில் ஒருவர் முதல்-அமைச்சராக இருக்கிறார். அவர் தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை. தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.
மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் தி.மு.க.வும், கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம். இந்த விவசாயச் சட்டங்களை நாம் மட்டுமா எதிர்க்கிறோம். இந்தியாவே எதிர்க்கிறது. போராடுகிறது.
வேளாண் சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய கேரள அரசு தயாராகி வருகிறது. பக்கத்தில் இருக்கும் மாநிலம் நீதிமன்றத்துக்கு செல்வதைப் போல தமிழக அரசும், நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அதை செய்ய தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.இந்த 3 சட்டங்களை ஆதரித்து லோக்சபாவில் ராஜ்யசபாவில் வாக்களித்ததோடு மட்டுமின்றி, இந்தச் சட்டத்தை முழுவதுமாக ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். தன்னை ‘விவசாயி, விவசாயி’ என்று சொல்லும் அவர் விவசாயி அல்ல. விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் ‘விஷவாயு’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்’ என்று பேசியுள்ளார்.