வெள்ளியங்காடு வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 500 வாழைகளை சேதப்படுத்தின.!
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் கடந்த 10 நாட்களாக ராமேகவுண்டன் புதூர், தாசம்பாளையம், குரும்பனூர் கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தினமும் இரவு 7 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டு அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன. பொதுமக்களும், வனத்துறையினரும் விடிய விடிய பட்டாசுகள் வெடித்து விரட்டினாலும் யானைகள் பயிர்களை நாசம் செய்துவிட்டுதான் செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களும் இரவு முழுவதும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு காரமடை வெள்ளியங்காடு வடக்கு தோட்டம் சுப்பையன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த 3 யானைகள் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், தர்பூசணி கொடியையும் சேதப்படுத்தி சென்றன. இதில் சுமார் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து காரமடை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.