வெங்காய ஏற்றுமதிக்குத் தடை!!!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் இலங்கை, வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா பரவல் சூழலில் கூட, கடந்த சில மாதங்களில் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வடமாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலையில், தமிழகத்தில் பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநரகம் அறிவித்துள்ளது.