வரலாற்றில் இடம் பிடித்த திருப்பதி பிரம்மோற்சவம்!!!
தென்னிந்திய கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் முக்கியமான ஒன்று. கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவுபெற்றது. பழங்காலம் தொடங்கி, மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவம் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்டது.
பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படாத நிலையில், நாள்தோறும் 13ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதி மலையில் அனுமதி வழங்கப்பட்டது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.மாட வீதிகளில் நடக்கும் சாமி ஊர்வலம் வழக்கத்திற்கு மாறாக, கோயில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்பட்டதால், காலை, இரவு வேளைகளில் பிரம்மோற்சவ எழுந்தருளலை ஒரே ஒரு பக்தர் கூட நேரில் தரிசிக்கவில்லை. பக்தர்களின் வருகை, லட்டு பிரசாத விற்பனை, இலவச உணவு விநியோகம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டு சாதனையை முறியடித்துவந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தன.