நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இந்நிலையில், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் அரசு தடை விதித்து
அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பால் பாக்கெட், எண்ணெய் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றுக்கும் விலக்கு அளிக்கப்ட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.