லடாக் எல்லையில் பதற்றம் தணியுமா? இந்திய-சீன பேச்சுவார்த்தை…
லடாக் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தது பதற்றத்தை அதிகரித்தது. இதையடுத்து எல்லையில் இருநாடுகளும் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வந்தன. எனினும் பதற்றத்தை தணிக்க ராணுவ அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான 7-வது கட்ட பேச்சுவார்த்தை, மெய்யான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுஷூல் என்ற இடத்தில் நடைபெற்றது.
நண்பகலில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம் நீடித்து, நள்ளிரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக பேச்சுவார்த்தையில் வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரைக் கொண்ட சீன ஆய்வுக் குழுவின் ஆலோசனையில் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
சி.எஸ்.ஜி எனப்படும் சீன ஆய்வுக்குழு, சீனா குறித்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் போது முழுமையாகவும், விரைவாகவும் படைகளை திரும்பப்பெற வேண்டும் என சீனாவை இந்தியா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய – சீன பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.