மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது
4-வது கட்ட ஊரடங்கு தளர்வுகளை கடந்த சனிக்கிழமை அறிவித்த மத்திய அரசு, மெட்ரோ ரயில்களை, வரும் 7-ம் தேதி முதல் இயக்கலாம் என்று குறிப்பிட்டது. நாடு முழுவதும் சென்னை உள்பட 17 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று வெளியிட்டார். அதில், மெட்ரோ ரயில் சேவைகளை வரும் 7-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதிக்குள் அனைத்து வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் குறைந்த நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், பின்னர் படிப்படியாக அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை மூட வேண்டும். அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யலாம். ரயில் நிலைய நுழைவுவாயிலில் பயணிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
நுழைவு வாயிலில் பயணிகள் பயன்படுத்துவதற்காக கிருமிநாசினிகளை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பகுதிகளில் முடிந்தவரை புதிய காற்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வீட்டுவசதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் சமய்பூர் பட்லி முதல் ஹுடா நகரம் வரையான மெட்ரோ ரயில் பாதையில் வரும் 7-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மாதத்தில் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்க மாட்டோம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் சேவை தொடங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாமா என்பது குறித்து தலைமைச் செயலாளர் முடிவுசெய்வார் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.