முன்னாள் சிபிஐ இயக்குநர் அஷ்வனி குமார் தற்கொலை…
இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஷ்வனி குமார் 2008 முதல் 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக பதவி வகித்தார். 2013-14 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டுள்ள இவர், குடும்பத்துடன் சிம்லாவில் வசித்து வந்தார். இந்நிலையில், அஸ்வனி குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது ஆத்மா புதிய பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும், தனது உடலுக்கு எந்த சடங்குகளும் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக அஸ்வனி குமார் இருந்த காலகட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், சொராபுதீன் என்கவுன்டர் போன்ற முக்கிய வழக்குகளை கையாண்டார். சொராபுதீன் வழக்கில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா கைது செய்யப்பட்ட போதும் சிபிஐ இயக்குநராக அஷ்வனி குமார் பதவி வகித்து வந்தார். அதன்பின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பதவியை விட்டு விலக நேரிட்டது.