முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைய உள்ளார்!!!
கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். மேலும், அரசியல் ரீதியாக சில பேட்டிகளையும் அளித்திருந்தார். மோடியை ஏன் பிடிக்கும், ரஜினிகாந்தின் அரசியல் என, கிட்டத்தட்ட ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசியதால், அவர் தொடங்க உள்ள கட்சியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அண்ணாமலை இன்று டெல்லியில் காலை 11 மணிக்கு பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைய உள்ளார். பாஜகவை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு “நாட்டின் மீது அக்கறை கொண்டவன் நான். நாடு, தேசம் என நினைக்கக் கூடியவன். அதனால்தான் ஐ.பி.எஸ் ஆனேன். தமிழகத்தில் தற்போது ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது என்பது என்னுடைய பணிவான கருத்து. அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என நினைக்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள கட்சியில் ஏன் இணையவில்லை என்ற கேள்விக்கு, அதற்கான பதிலை விரிவான அறிக்கையாக பின்னர் தர இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.