முதிய தம்பதிக்கு கை கொடுத்த நெட்டிசன்கள்…
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக உலகமே திண்டாடி வருகிறது. டெல்லி மால்வியாநகர் பகுதியில் அனுமன் கோயில் அருகே “பாபாகா தாபா” என்ற சிறிய உணவகம் நடத்தி வந்த 80 வயது முதியவர் கந்தா பிரசாத்தும் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டார். 1990ம் ஆண்டில் இருந்து சிறிய உணவகத்தை நடத்தி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக நாள்தோறும் வருவாயின்றி கடை நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த இளைஞர் ஒருவர் கடந்த 6ம் தேதி யூடியூபில் முதியவர் மற்றும் அவரின் மனைவி படும் துயரத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். வீடியோவில் பேசிய கந்தா பிரசாத் ஒரு நாளைக்கு 60 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதாக கண்ணீர் சிந்தினார்.
இந்த நிலையை அறிந்த யூடியூபர் கெளரவ் வாசன், தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் காந்தா பிரசாத் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து ஒரே நைட்டில் இந்திய அளவில் பேசும்படி வைத்து விட்டனர். முதியவர் கண்ணீர் சிந்தியதை கண்ட கிரிக்கெட் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலம் உதவ முன்வந்தனர். கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த உணவகம் பற்றி பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினர். #bhabakadhaba, #malviyanagarஎன்ற ஹேஷ்டேகுகளை உருவாக்கி டிரெண்ட்டாக்கினர். நாடு முழுக்க பேசுபொருளாக மாறிய முதியவருக்கு பண உதவி செய்த பிரபலங்கள் முதியவரின் கடையில் சாப்பிட்டபடி புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனால் நெகிழ்ந்து போன கந்தாபிரசாத், இந்தியாவே தன்னுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது காந்தா பிரசாத் கடையில் கூட்டம் களைகட்டியுள்ளது. முன்னர் போல் அல்லாமல் தற்போது புதிய ஆர்டர்களும் குவிய தொடங்கி விட்டதாம். இது குறித்து பேசும் யூடியூபர், ”முதியவர்களின் போராட்டத்தை கண்ட ஒரு கணம் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். நேற்று முன் தினம் அவர்கள் உணவகத்திற்கு சென்றேன். அவர்களின் கஷ்டத்தை கண்டு உதவ முன்வந்தேன்” என்று கூறியுள்ளார். தற்போது அவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.
முதியவரான காந்தா பிரசாத் தெரிவிக்கையில், எங்கள் உணவகத்திற்கு தற்போது நிறைய மக்கள் வருகின்றனர் என கூறியுள்ளார். அவரது மனைவி கூறுகையில், மிகக் கடினமான நிலையில் இருந்தோம். ஊரடங்கால் இதுபோன்றுகஷ்டப்படும் பலர் உள்ளனர்.. என்று கூறினார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் பலரின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு என்பதில் ஐயமில்லை.