“மீண்டும் 2012 ஃபார்முலா” – காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் 23 பேர் எழுதிய கடிதம் அக்கட்சிக்குள் புயலை கிளப்பியது. இதையடுத்து திங்கட்கிழமை கூடிய காரியக்கமிட்டியில் சோனியாகாந்தி மேலும் 6 மாதங்களுக்கு இடைக்கால தலைவராக தொடர்வார் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. எனினும் குலாப் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, முகுல் வாஸ்னிக் மற்றும் ஜிதின் பிரசதா ஆகியோர் கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிகிறது. கூட்டம் நிறைவடைந்த பிறகு குலாம் நபி ஆசாத்தின் வீட்டில், கடிதத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் கபில் சிபல், சசி தரூர், மனீஷ் திவாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து 23 தலைவர்கள் எழுதிய கடிதத்தை காங்கிரசின் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பலரும் பார்க்கவில்லை என்றும், அந்த கடிதம் வெளிப்படையாக அனைவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் மட்டுமே என்ன பிரச்னை என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார். காங்கிரஸ் கூட்டு தலைமையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே நேரு குடும்பம் எப்போதும் இருக்கும் என குலாம் நபி ஆசாத் உறுதிபட தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் தலைமை மீதான அதிருப்தியை கடிதம் வடிவில் தெரிவித்திருக்க கூடாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி. சாக்கோ கூறியுள்ளார்
இதனிடையே, காங்கிரஸ் தலைவருக்கு உதவும் வகையில் 4 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த குழு உறுப்பினர்களை தலைவரே நியமிப்பார் என்றும், இந்தக் குழுவின் தலைவர், துணைத்தலைவருக்கான அதிகாரத்துடன் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த குழு ராகுல்காந்தியின் ஆலோசனையின்பேரில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
2012-ம் ஆண்டு சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது, அகமது படேல், ஏகே அந்தோணி மற்றும் ஜனார்த்தன திரிவேதி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.