மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரயில்வே பணி நியமனம்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில்நுட்ப பிரிவில் ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் புதிதாக பணி நியமனத்திற்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி பொன்மலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொரோனா பொது முடக்க காலத்தில் திடீரென நடைபெறும் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக கூறி ரயில்வே தொழிற் பழகுநர் பயிற்சி முடித்து காத்திருப்போர் (அப்ரண்டீஸ்) பொன்மலை ஆர்மரி கேட் அருகே ஆர்ப்பாட்டம் நேற்றும் இன்றும் நடத்தினர். அப்ரண்டிஸ் முடித்தோரின் போராட்டத்தையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறுத்தப்பட்டது. பணி நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் ரயில்வே நிர்வாகமும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு 584 பணியிடங்களுக்காக நடைபெற்ற ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத்தான் தற்போது நியமனம் நடைபெறுகிறது. இந்தேர்வைப் போலவே, நியமனமும் வெளிப்படையாக நடக்கவில்லை. தமிழ்நாட்டினர் பலர் தேர்வு எழுதியும் பெயரளவிற்கு கூட தேர்வு செய்யப்படாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துள்ளது என்கிறார் ரயில்வே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன்.
மேலும், ரயில்வேயில் ஆள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான நடவடிக்கை ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வட மாநிலத்தவர்களுக்காக ரகசிய பணி நியமனம் நடைபெறுகிறதோ என்கிற சந்தேகமும் எழுவதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.இந்நிலையில், பொன்மலை ரயில்வே பணிமனை பணி நியமனத்தில் முறைகேடாக வட மாநிலத்தவர்கள் நியமனம் என்று கடந்த ஆண்டு குற்றச்சாட்டு, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் ரயில்வே பணி நியமனம் தற்போது பெறுகிறது என்றும் ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றோர் கூறுகின்றனர். இந்நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் வட மாநிலத்தினர் எப்படி திருச்சி வந்தனர்? முறைப்படி இ-பாஸ் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரயில்வே பணி நியமனத்திலும் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்பட்டு, முறைகேடாக பிற மாநிலத்தவர்கள் பெருமளவு நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்றன.