மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு ரூ.30,230 கோடி கடனுதவி!!!
தமிழக மின்வாரியத்துக்கு 30 230 கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அரசு ஓப்புதல் அளித்துள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளின் மின்வாரியங்கள் கடனில் சிக்கித் தவிப்பதால் அவற்றுக்கு உதவுவதற்காக 90 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஓதுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் அறிவித்தார். ஆனால், மாநில மின்வாரியங்களின் கடன்தொகை ஓரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது.இந்நிலையில் தமிழக மின்பகிர்மான நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழக மின்வாரியத்தின் அங்கமான டான்ஜெட்கோ 32 ஆயிரம் கோடி ரூபாயை கோரியிருந்த நிலையில் 30 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஓதுக்கியுள்ளது.
மின்பகிர்மான நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் உள்ளது. அதில் மின்சாரம் வாங்கிய வகையில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது. தற்போது கிடைக்கவுள்ள 30 ஆயிரம் கோடியில் அந்த கடனை செலுத்திவிட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.30 ஆயிரம் கோடி கடன்தொகையில் மத்திய அரசின், ஊரக மின்மய நிறுவனம் 17830 கோடி ரூபாயும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 12400 கோடியையும் 10 ஆண்டு கால கடனாக வழங்கவுள்ளன. மின்வாரியத்துக்கு கூடுதலாக 3 ஆண்டு அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்த 32 ஆயிரம் கோடி ரூபாய் கடன், நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மின்வாரியத்துக்கு பேருதவியாக அமையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.