சென்னை: பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கரவாகனத்தில் வந்து அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணாசாலையில் இரவு, பகலாக வாகனங்கள் ஓயாமல் சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்பென்சர் சிக்னலில் ஒருவர் நிற்கிறார்.
அருகில் உள்ள நபர் அவர் யார் என உற்று நோக்கியபோது, அவர்களைப் பார்த்து கையசைத்து சிரித்தார் அவர். அப்போது தான் அவர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உடனே காரில் இருந்து இறங்கிய சிலரும், பைக்கில் இருந்த சிலரும் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்கவே, அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தலைக்கவசம் எப்போதும் ரொம்ப முக்கியமானது அதை பலபேர் மறந்துட்டாங்க, இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ரொம்ப அதிகமா இருக்கிறது என்றார் அமைச்சர்.
இளைஞர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஹெல்மெட் அணிந்துகொண்டு பைக்கில் வந்ததாக தெரிவித்தார். மேலும், இன்று ஒரு நாள் மட்டுமல்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதேபோல ஹெல்மெட் அணிந்துகொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முடிவெடுத்திருக்கிறேன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனைகேட்டு அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எப்போதுமே மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடிய அமைச்சர்களில் ஒருவர் ஜெயக்குமார். இந்த விஷயத்திலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.