பெங்களூர்: பெங்களூர் நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது ஒரு பேரொலி. நேற்று மதியம் வெளியான அந்தப் பேரிரைச்சல் நகர மக்களை நடுக்கத்திற்கு உள்ளாக்கிவிட்டது. இந்த சத்தம் ஏன் எழுந்தது, என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்று மதியம் சுமார் 1 மணி 20 நிமிடம் அளவுக்கு டமால் என்ற சப்தம் பெங்களூரில் வெளிப்பட்டது. ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இந்த ஒலி கேட்கவில்லை. ஒரே நேரத்தில், பல்வேறு பகுதிகளிலும் இந்த ஒலி உணரப்பட்டது. கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர். குறிப்பாக கே.ஆர்.புரம் பகுதியில் தான் இந்த ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக பத்திரிகையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் பதில் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.