பிரபல ரவுடி “விகாஸ் துபே” போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்..!
கான்பூர்: உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 09) காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.
அவரை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் மழை பெய்ததால், சிக்கல் நீடித்தது.இதற்கிடையே விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.துப்பாக்கிசூடு சப்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.