பாஜக நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது…
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. திரிணாமுல் கட்சியினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், பாஜக நிர்வாகிகள் கொல்லப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளதாக பாஜக அறிவித்திருந்தது. இதற்கு மாநில அரசு தடை விதித்திருந்த நிலையில் கொல்கத்தா மற்றும் ஹவுராவில் இருந்து தடையை மீறி பேரணி புறப்பட்டது.ஊர்வலத்தில் கைலாஷ் விஜய்வர்ஜியா, முகுல் ராய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச் செல்ல பாஜகவினர் முயன்றனர்.
இதையடுத்து பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது காவல்துறையினரை நோக்கி பாஜகவினர் கற்களை வீசினர். தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.காவல்துறையினர் மீது கற்கள், ஈரமான செங்கற்கள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போராட்டக்கார்கள் சிலரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள பாஜகவினர் கட்சியின் துணைத்தலைவர் ராஜூ பானர்ஜி உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்காக தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.