பலத்த மழையால் மும்பையில் நீடிக்கும் “ரெட் அலெர்ட்”
மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு முதல் விடிய விடிய 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், லோயர் பேர்ல் பகுதியில் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.பேர்ல் கிழக்கு பகுதியில் சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கு ஓடியதால், அதிகாலையில் பணிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பேர்ல், பிரபாத்வி ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது.
தாதர், ஹிந்த்மடா, பெண்டி பஜார் உட்பட பல்வேறு நகரங்களில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 10 மணி நேரத்தில் 23 சென்டி மீட்டர் மழை பெய்தது. இதற்கிடையே, மும்பையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை கடல் பகுதியில் இன்று பிற்பகலில் கடல் அலை 4 புள்ளி 5 மீட்டர் அளவுக்கு உயரக் கூடும் என்பதால் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.