முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் 7 அடி உயரத்தில் அவரது முழு உருவத்தினை பனை ஓலையால் உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளார் பனை தொழிலாளி ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பனையேறும் தொழிலாளி. இவர் தற்போது பனை ஓலையால் பலவித பொருட்களை செய்து காட்சிப்படுத்தி வருகிறார்.
பெருந்தலைவர் காமராஜர், அப்துல்கலாம், தாஜ்மகால், கோபுரம், வில்வண்டி, மாட்டு வண்டி, குழந்தைகள், பனைதொழிலாளி என சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருட்களை பனை ஓலையால் செய்து அசத்தியுள்ளார். இதை அவரது வீட்டில் பார்வைக்கும் வைத்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு 7 அடி உயரத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை பனை ஓலையால் முழுமையாக உருவாக்கி உள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, நான் பனை ஓலையால் ஏராளமான பொருட்கள் செய்துள்ளேன். எனக்கு ஜெயலலிதாவின் உருவத்தை பனை ஓலையால் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்தேன். இதற்காக கடந்த மூன்று மாத காலமாக கடுமையாக உழைத்து தற்போது 7 அடி உயரத்தில் ஜெயலலிதா சிலையை செய்துள்ளேன். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதனை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர் என்றார்.