கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி மற்ற அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா நோயாளிகளைத் தவிர மற்றவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தன் இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸாக்கி பிறந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு மருத்துவர்.
மும்பையில் அலிபாக் பகுதியில் உள்ள வாஜே நர்சிங் ஹோமில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 7:30 மணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.9 கிலோ இருந்துள்ளது. பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சையனோசிஸ் என்ற உடல் நீலநிறமாகும் பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் குழந்தையை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வாஜே மருத்துவமனையில் அதற்கான எந்த வசதிகளும் இல்லை.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட மருத்துவர் சந்திரகாந்த் வாஜே, 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்துத் தகவலையும் கூறி உதவி கேட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது. போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர், வாஜே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரும் குழந்தையின் உடல்நிலையைப் பரிசோதித்து மிக விரைவாகக் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆம்புலன்ஸ் வசதி சுற்றுப்பகுதியில் எங்கும் இல்லை.
பின்னர் பொதுச்சுகாதார நிலையத்தில் நர்சாகப் பணியாற்றி வந்த குழந்தையின் அத்தை சுப்ரியா பெட்கர், தன்னையும் குழந்தையையும் இருசக்கர வானத்தில் அழைத்துச் செல்லும்படி யோசனை கூறியுள்ளார். இதை ஏற்ற மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் தன் பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றி மிக விரைவில் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றுள்ளார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்கு குணமடைந்துள்ளது.
இது பற்றிப் பேசியுள்ள மருத்துவர் சந்தோர்கர், “அலிபாக் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது. குறித்த நாளை விட பத்து நாள்களுக்கு முன்னதாகவே குழந்தை பிறந்துவிட்டது. இதனால் தாய், குழந்தை இருவருக்குமே உடலில் பிரச்னை ஏற்பட்டது. தாய்க்கு நீரிழிவு போன்ற மற்ற பிரச்னைகள் இருந்ததால் பிரசவித்தவுடன் அவரின் உடல்நிலையும் மோசமாக இருந்தது.
அதனால் குழந்தையை மட்டும் நாங்கள் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தோம். சுமார் 12 மணி நேரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகே குழந்தை நல்ல உடல்நிலைக்குத் திரும்பியது. இரு நாள்கள் தீவிர சிகிச்சையிலிருந்து குழந்தையின் உடல் முற்றிலும் குணமடைந்ததும் கடந்த வெள்ளிக்கிழமை தாய் இருந்த மருத்துவமனைக்கே குழந்தையும் மாற்றப்பட்டுவிட்டது” என கூறியுள்ளார்.