விற்பனை மற்றும் சேவை வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசு விதித்து வருகிறது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு நிதி வழங்க உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், இழப்பீடு வழங்குவதற்காக ஆடம்பரப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 1,65,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 95,444 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது.
தற்போது கொரோனா நெருக்கடியால் அரசுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது. இதில், இழப்பீட்டுத் தொகைக்காக மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ள அனுமதிப்பது குறித்தும், அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இழப்பீட்டுக்காக கூடுதல் வரி விதிக்கப்படும் பட்டியலில் கூடுதலாக பொருட்களை சேர்க்கலாமா அல்லது கூடுதல் வரியை அதிகரிக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.