ரயில்வே சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி கரோனா சிகிச்சை மையத்தில் 2,500 மருத்துவர்கள், 35 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 215 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த ரயில் பெட்டிகள் நிறுத்தப்படும் என ரயில்வே துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,539 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 29.35 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளை சிகிச்சையளிக்கும் மையமாக மாற்ற முடிவு செய்தது. இதுவரை 5,231 ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 17 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, 33 மருத்துவ மண்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 5 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே தயார் செய்த ரயில் பெட்டிகள் அனைத்தும் மத்தியசுகாதாரத்துறை உத்தரவின்படி, மாநிலங்கள், யூனியன் பிரேதசங்கள் வாரியாக ஒதுக்கப்பட உள்ளது. இந்த ரயில் பெட்டிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டவுடன் அதன் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். அதேசமயம், ரயிலின் பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர், உணவு, பாதுகாப்பு, பழுது பார்த்தல் போன்றவற்றை ரயில்வே கவனிக்கும்.
நாட்டில் ஹாட் ஸ்பாட் கரோனா மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு இந்தப் பெட்டிகள் நிறுத்தப்படும். குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை நகரங்களில் நிறுத்தப்படும். மாநில வாரியாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு 21 ரயில் நிலையங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்கள், மேற்கு வங்கத்தில் 18, பிஹாரில் 15, மத்தியப் பிரதேசத்தில் 14, அசாமில் 13 ரயில் நிலையங்களிலும் இந்தப் பெட்டிகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.