சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் மாபெரும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக திகழ்வது அம்மா உணவகங்கள் ஆகும். தமிழகம் முழுவதும் நகர்ப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்த அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு ரூபாயிக்கு இட்லியும், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை ரூ.5க்கும், தயிர் சாதம் ரூ.3க்கும் என ஏழை மக்கள் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 வார்டுகளில் ஏற்கனவே 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, ரூ. 27 லட்சம் மதிப்பில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று மண்டலங்களில் நடமாடும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்றும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள், அதே விலையில் விற்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், கட்டுமான பணியிடங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் செயல்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.