“செய்தி பார்த்தால் பணம் கொட்டும்” -அபெக்ஸ் நிறுவனத்தின் மோசடி…
ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை அன்று ஈரோட்டைச் சேர்ந்த சிலர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு அபெக்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் , சுரேஷ் மற்றும் சாய்ராம் ஆகியோரை பங்குதாரராக கொண்ட இந்த நிறுவனம் தான் மோசடியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அபெக்ஸ் ஏடிசி நியூஸ் சேனல் என்ற அந்த நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தொலைக்காட்சி செய்தியை குறிப்பிட்ட நேரம் பார்த்தால் பணம் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வந்துள்ளன.
85 நாடுகளில் இருந்து 19 மொழிகளில் வெளியாகும் உலகச் செய்திகளை செயலி மூலம் பார்த்தால் 300 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என அந்த விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்காக 1,440 ரூபாய் முதல் 48,000 ரூபாய் வரை வைப்புத் தொகை செலுத்தினால், 20 மாதங்களில் 4 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியுடன் இயங்குவதாகத் தெரிவித்துக் கொண்ட அந்த நிறுவனம், மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு மற்றும் டைமண்ட் என 6 வகையான திட்டங்களை அறிவித்து அதற்கான கட்டணத்தையும் தெரிவித்துள்ளது. மேலும் சங்கிலித் தொடர் வியாபார அடிப்படையில் புதிய நபர்களை சேர்த்து விட்டால் 20 சதவீதம் கமிஷன் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்தநிறுவனத்தில் 1 லட்சத்து 50 பேர் வரை உறுப்பினராக இணைந்து சுமார் 100 கோடி வரை முதலீடு செய்தாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1000 பேர் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் அபெக்ஸ் நிறுவனத்தின் செயலி செயலிழந்து விட்டது. அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் விசாரி்த்த போதுதான் தங்களைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொண்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதன் கிழமை அன்று புகார் அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளனர். முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பற்றி தீர விசாரித்த பின்பே முதலீடு செய்ய வேண்டும் என போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் இதுபோன்ற மோசடிகள் தொடரத் தான் செய்கின்றன. பேராசையை தவிர்விப்பதுடன், முதலீட்டாளர்களுக்குத் தேவை விழிப்புணர்வு மட்டுமே.