கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தை முன்வைத்து பினராயி விஜயன் அரசு வெற்றி..!
கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான மத்திய அரசின் முடிவை திரும்பப்பெறக்கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்து பேசினார். அதானி குழுமம் வழங்கும் தொகையை மாநில அரசே வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையிலும், விமான நிலையத்தை தனியாரிடம் கொடுக்கும் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அரசின் தீர்மானத்தை ஆதரித்த போதும், கேரள அரசு அதானி குழுமத்துக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தங்கக்கடத்தல் விவகாரத்தை எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன், மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார். ஐடி துறைக்கு பொறுப்பாக இருக்கும் முதலமைச்சர், முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் பணி குறித்து தனக்கு தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை என்றார். தங்கக்கடத்தலில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நடைபெற்ற விவாதத்தின் போது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்ளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கேரளா முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்ற பிறகு மாநில அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவே ஆகும். எனினும் ஆளும் கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது.