தங்கப் புதையல் கிடைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செந்தில்குமார் என்பவர் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி மகாலட்சுமியும் மருந்துக்கடையை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ஒரு தம்பதி தொடர்ந்து மருந்துகளை வாங்க கடைக்கு வந்துள்ளனர். குறிப்பாக மகாலட்சுமி கடையில் தனியாக இருக்கும் நேரத்தில் வந்து அந்த தம்பதியினர் அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளனர்.
இதனை அடுத்து ஒரு நாள், தாங்கள் மதுரை திருமங்கலத்தில் உள்ள விடுதியில் தங்கி இருப்பதாகவும், அந்த பகுதியில் பள்ளம் தோண்டும் பணி செய்து வருவதாகவும் அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர். பள்ளம் தோண்டும் போது தங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்ததாகவும், அதை குறைந்த விலைக்கு விற்க உள்ளதாகவும் மகாலட்சுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். உடனே இதுகுறித்து மகாலட்சுமி தனது கணவர் செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். செந்தில்குமாரும் தங்கக் கட்டிகளை கொண்டு வாருங்கள் பார்த்து சொல்கிறேன் என அந்த தம்பதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர்கள் தங்கத்தை எடுத்து வந்து செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தங்கக் கட்டிகள் மீது சந்தேகமடைந்த செந்தில்குமார் வேண்டாம் என மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருந்துக்கடையில் மகாலட்சுமி தனியாக இருக்கும் நேரத்தில் தங்கக் கட்டிகளை, மேலும் குறைவான விலைக்கு தருவாதகவும், கணவரிடம் தெரிவிக்காமல் வாங்கிக் கொள்ளுமாறும் அந்த தம்பதிகள் ஆசை காட்டியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மகாலட்சுமி தங்கக் கட்டிகளை வாங்கிக் கொள்வதாக கூறி போலீருசாக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ரகுராமன், அங்கம்மாள் என்பதும், அவர்கள் வைத்திருந்தது பித்தளைக் கட்டி என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இதேபோல் பெண்களிடம் நட்பாக பேசி அவர்களை நம்ப வைத்து தங்கம் புதையல் கிடைத்ததாகவும், குறைந்த விலைக்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.