காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், “ஜம்மு – காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது படைப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரத் தாக்குதலில், தனது இன்னுயிரைத் தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளதோடு, மறைந்த சந்திரசேகரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சந்திரசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமிக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.