கழிவுநீர் தேங்கினால் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை பாயும்…
கொருக்குப்பேட்டை பகுதியில் நீண்ட நாட்களாக சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பல்வேறு சுகாதாரக்கேடு ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.அவ்வாறு கழிவுநீர் தேங்கும் பகுதியில் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு துறையாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விசாரணையில், பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்த துறையும் ஆய்வுக்கு வர விரும்பவில்லை. எனவே ஆய்வை ஒருங்கிணைக்கும் துறையாக சென்னை குடிநீர் வாரியத்தை நியமிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியது.அதன்படி சென்னை குடிநீர் வாரியத்தின் தண்டையார்பேட்டை பகுதி பொறியாளர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு காரணமாக வழக்கு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், தண்டையார்பேட்டை பகுதி பொறியாளர் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.அப்போது கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக நேரத்தோடு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியது.
அதை ஏற்று வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆய்வுக் குழு இதுவரை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. கழிவுநீர் தேங்குவதை தடுப்பதில் சென்னை மாநகராட்சிக்கும் பொறுப்பு உள்ளது. அதனால் மாநகராட்சியும் ஒருங்கிணைப்பு துறையாக செயல்பட வேண்டும். சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், கொசு உற்பத்தி அதிகமாக மலேரியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
ஆய்வுக் குழு தனது கடமை மற்றும் பொறுப்புடன் காலத்தோடு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், தொடர்புடைய மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க நேரிடும். கூட்டாக ஆய்வு செய்ய முடியாவிட்டால், தொடர்புடைய துறைகள் தனித்தனியாக, சாலையில் கழிவுநீர் தேங்கிய இடத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, இனி வரும் காலங்களில் தேங்காமல் இருக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அப்படி அறிக்கை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் 2010 பிரிவு 25-ஆம் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.