கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்…
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. அதேநேரம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என அச்சம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருசில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100-க்கு கீழ் கொண்டுவர வேண்டும். இன்னும் சில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் இருக்கிறது, அதை 50-க்கு கீழ் குறைக்க வேண்டும்.
50-க்கு கீழுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான பணிகளை நீங்கள் (ஆட்சியர்கள்) செய்ய வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை, காவல் துறை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றிய காரணத்தினால், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.