கம்போடியா நாட்டின் சியாம் ரீப் (Siem Reap) நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ (Banteay Srei) என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. இந்த கோவில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவராக கொண்டாடப்படும் காரைக்கால் அம்மையார், 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்.
பான்டே ஸ்ரே அல்லது ‘பெண்களின் சிட்டாடல்’ அல்லது ‘அழகின் சிட்டாடல்’ என மொழிபெயர்க்கப்பட்ட இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள் காணப்படுகின்றன.
காரைக்கால் அம்மையாரின் புகழ் இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் பரவியுள்ளது என்பது பல ஆய்வுகளின் உண்மை. 9 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர்கள், தங்களது இறைப்பணியை இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, அதாவது, சோழபேரரசு எங்கெல்லாம் ஆட்சி அமைத்ததோ அங்கெல்லாம் காரைக்கால் அம்மையாரின் சிந்தாந்த நெறிகளை பரப்பியுள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ராஜேந்திரவர்மன் மற்றும் ஜெயவர்மன் V ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அவரது தென்னிந்திய ஆன்மீக ஆலோசகர் யஜ்னவரஹா அவர்களால் கட்டப்பட்ட மற்றும் நிறைவு செய்யப்பட்ட கோயிலாக பாண்டே ஸ்ரேயை சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
கடல் கடந்து சென்று தாய்லாந்திலும் அம்மையாரின் புகழ் பரவியுள்ளது. அதாவது 11 ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட தாய்லாந்து நாட்டின் நினைவு சின்னமாக உள்ள ஆலயங்களில் நாட்டிய கோலத்திலான சிவபெருமான் சிலை அருகே தோலுரித்த நிலையில் பெண் உருவம் காணப்படுவதாகவும், அது காரைக்கால் அம்மையாரே என அந்நாட்டின் துறவிகள் போற்றி வணங்கிவருகின்றனர்.
இப்படி மலேசியா, இலங்கை, பர்மா தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் காரைக்கால் அம்மையார் புகழ் பரவியுள்ளது என வராலாற்று சிந்தனையாளர்கள், ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை இன்றும் வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
இவ்வாறு அம்மையாரின் சிறப்பை அறிந்த தமிழ்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள் , “அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று பொக்கிஷங்களை உலக நாடுகள்தோறும் திரட்டி சிறப்பு மியூசியம் அமைக்க முன்வர வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.