கடன் தவணைக்கு வட்டி போடுவது கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி : ஊரடங்கு காலத்தில், கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு வட்டி போடுவது கவலை அளிக்கிறது, இது தவறானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது : கடன் தவணை விவகாரத்தில், 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வட்டி, பின்னர் செலுத்த வேண்டிய கட்டணத்தில் சேர்க்கப்படுமா அல்லது வட்டிக்கு வட்டி செலுத்தப்படுமா? என நாங்கள் கவலைப்படுகிறோம். ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுவது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த விடாதா?இதனால், அடுத்த 3 நாட்களுக்குள் 3 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைக்கு வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இது குறித்த விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கை வரும் 17 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், கடன்தவணை காலத்தில் செலுத்திய வேண்டிய தொகைக்கு வட்டி விதிப்பது தவிர்க்க முடியாதது எனக்கூறினார்.