மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, திக, விசிக, பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில், பதில் மனு தாக்கல் செய்த இந்திய மருத்துவ கவுன்சில், இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்ட நிலையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
“உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்கமுடியாது. முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவத்ற்கான மத்திய அரசு ரிசர்வ்வேசன் குறித்த சட்டத்தை கொண்டு வர முடியும்.
அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றபோது, அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத மருத்துவ கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.