எண்ணெய் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து இதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி.
அசாம் மாநிலத்தில் கடந்த 14 நாட்களாக எண்ணெய் கசிவு ஏற்பட்டு வந்த ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் திடீரென நேற்றுபயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியாகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் கிணறு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து, 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான திப்ரு-சைகோவா தேசியப் பூங்கா அருகேயுள்ள பஹ்ஜனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் ஓ.ஐ.எல். நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் இருவர் தீப்பிடித்ததால் அருகில் உள்ள குளத்திலி விழுந்ந்து மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் இவரது உடலை மீட்டனர், அசாம் வனத்துறையின் ட்ரோன்கள் மூலம் இருவரது உடல் இருக்கும் இடமும் அடையாளம் காணப்பட்டது.இறந்தவர்களின் பெயர் துர்லவ் கோகய், திகேஷ்வர் கோஹைன் என்றும், இவர்கள் ஓ.ஐ.எல். நிறுவனத்தின் தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்கள். இதில் துர்லவ் கோகய் அஸாம் கால்பந்து அணியின் கோல்கீப்பர் ஆவார்.
பற்றி எரிந்த தீ புதன்கிழமை பெரிய அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து பேரழிவு தடுப்பு நிபுணர்கள் 3 பேர் வந்ததற்கு மறுநாள் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் 125 நாடுகளில் இத்தகைய தீவிபத்துகளைக் கையாண்டவர்கள் என்று ஓ.ஐ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹ்ஜன் எரிவாயு அல்லது எண்ணெய்க் கிணறில் எண்ணெய் கண்டுப்பிடித்து எடுக்க வெளிநிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் அளித்த குஜராத் நிறுவனத்திற்க் ஓ.ஐ.எல். நிறுவனம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3,720 மீட்டர் ஆழத்திலிருந்து எரிவாயு எடுக்க முற்பட்டபோதுதான் தீப்பிடித்தது.